d tags of your site:
Mon. Jul 22- 2019

தமிழகம்: 88 வயதில் மகனுக்காக திரைப்படம் எடுத்த தாய் – விருதுகள் குவித்த படம்

Share This News:

ஆர்வத்துடன் அந்த பாட்டியோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள் எல்லோரும். அத்தனை பேருக்கும் பொக்கைவாய்ச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்தப் பாட்டி!

சென்னையில் சர்வதேச உலகத் திரைப்பட விழா நடந்த சமயம், தேவி தியேட்டர் வாசலில் இப்படி ஒரு காட்சி. அப்படியென்ன செய்துவிட்டார் அந்த மூதாட்டி?

தியேட்டரில் சற்றுமுன் திரையிடப்பட்ட ‘அடவி’ என்ற படத்தைத் தயாரித்திருந்தவர் அவரே.
88 வயதில் ஒரு புதிய திரைப்படத் தயாரிப்பாளர்! அவர் பேசினார்…

“இன்னிக்குத்தான் படத்தை முழுசா கூட்டத்தோட கூட்டமா உட்கார்ந்து பார்த்தேன். எல்லாரும் எழுந்திரிச்சி நின்னு கைத்தட்டினாங்க. இம்புட்டு நாளா நான் தின்ன சோறு இன்னிக்குத்தான்யா ஜீரணமாச்சு”

“பேரு சேது லட்சுமி. வயசு எம்பத்தெட்டு. சொந்த ஊரு… நாகர்கோயிலுக்குப் பக்கத்துல ஆதலவிளை. கட்டிக்கொடுத்து குடியேறினது… அம்மாஞ்சிவிளை”

பாட்டியின் ‘அடவி’ சினிமாவுக்குப் பல பெருமைகள் இருக்கின்றன. சென்னை திரைப்பட விழாவில் சர்வதேச அளவில் இந்தியா சார்பாக போட்டியில் கலந்துகொண்ட ஒரே படம் இதுதான். கருப்பு – வெள்ளையில் உருவாகியிருக்கும் சைலண்ட் மூவியும்கூட. வசனமோ பின்னணி இசையோ கிடையாது. ஆனாலும், பல்வேறு சர்வதேசத் திரை விழாக்களில் பாராட்டு பெற்றிருக்கிறது. பல நாடுகள் சென்று, விருதுகளும் வாங்கியிருக்கிறது.

பயபவ்யத்துடன் பாட்டிக்கு அருகே நின்ற அவரது மகனின் பெயர் வேல் முருகன். அவர்தான் படத்தின் இயக்குநர்.

கடந்த நவம்பர் மாதம் பாட்டியின் கணவர் பெரியவன் நாடார் இறந்தார். அதன் பிறகு மன வலியோடு சொந்த ஊரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவரை, ‘அடவி’க்குக் கிடைத்திருக்கும் பாராட்டுக்கள் ஆசுவாசப்படுத்தி இருக்கின்றன. சென்னையில் தற்போது மகனோடு வசிக்கிறார்.

“சின்னதுல இருந்தே இவனுக்கு சினிமா ஆசை. சைக்கிள்ல உட்கார்த்தி வச்சு, நிறைய சினிமாக்களுக்கு இவனக் கூட்டிட்டுப் போயிருக்கார் எங்க வீட்டுக்காரர். எனக்கும் சினிமா பிடிக்கும். ஆனா நானே ஒரு சினிமாப்படத்தை துட்டுப்போட்டு எடுப்பேன்னு கனவுலகூட நினைச்சதில்லை” என்று கூறி சின்னக் குழந்தை போலச் சிரித்தார் சேது லட்சுமிப் பாட்டி.

வேல் முருகன் சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் ஆசிரியர். இப்படி ஒரு புதுமையான திரைப்படத்தை எடுப்பதென தீர்மானித்ததும் அதற்காக பணம் சேர்க்க பிரயத்தனப்பட்டிருக்கிறார். மகனின் அலைச்சலைக் கண்டு மனம் பொறுக்காமல் ஒரு நாள் அம்மாவே அழைத்திருக்கிறார்.

“காசு பணத்துக்காக அலையாதே. நம்ம நிலத்தை விற்க ஏற்பாடு செய். அதை வச்சு படமெடு” என்று அம்மா சொன்னதும் மகனின் கண்களில் ஆனந்தம். காரணம், ஆறேழு தலைமுறையாக அவர்கள் குடும்பம் பாதுகாத்து வந்த சொத்து அது.

பணத்தை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போய்விட்டார் வேல் முருகன். ஆம், மேற்குத் தொடர்ச்சி மலையின் விளிம்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அடவி நயினார் என்ற அடர்ந்த காடுதான் படத்தின் களம்.

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕖 நிமிட செய்தி - NEWS TRAILER

“சத்தியமா அம்மாவே என் ஆசையை நிறைவேத்தி வைப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. ஒரு இயக்குநரா அவங்க முன்னாடி உட்கார்ந்து, என்ன எடுக்கப் போறோம்னு சொல்லிட்டுத்தான் பணத்தை வாங்கினேன்” என்றார் வேல் முருகன்.

பாட்டி எடுத்திருக்கும் அடவி படத்தின் ஹீரோ ஒரு தாத்தா! வெண்தாடிக் கவிஞர் விக்கிரமாதித்தனே அந்த நாயகன்!

காட்டு மனிதர்களுக்கும் நாட்டு மிருகங்களுக்குமான ஒரு கதையை, நிஜம் + கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறார் வேல் முருகன். இயற்கையையும் சூழலையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிடுகிறது படம்.

“உலகம் முழுக்க கொஞ்சப் பேருக்குத்தான் இதுவரை படத்தைக் காட்டியிருக்கோம். இனிமேதான் நம்ம ஊர் தியேட்டர்லயும் போட்டுக்காட்டணும். அதென்னமோ வாடகை வீடு பத்தி ஒரு படம்(டூலெட்) வந்திருக்காம்ல. நம்ம படத்துல நடிச்சிருக்க கவிஞரோட மகன்தான் அதில நடிச்சிருக்காராம். நம்ம ஊர் தியேட்டர்லயும் நல்லா ஓடுதாம். அதேமாதிரி நம்ம படத்தையும் தியேட்டர்ல காட்டுறதுக்காக விலைக்குக் கேட்குறார் ஒருத்தர். கம்ப்யூட்டர்லயும் படத்தைக் காட்ட காசு தர்றேன்னு பேசிக்கிட்டிருக்காங்க.
சட்டுப்புட்டுனு பேசி முடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கணும்.” சினிமா விநியோகத்தை சிம்பிளாகச் சொன்னார் பாட்டி.

அவர் தன் மகனுக்காக தயாரிக்கப் போகும் அடுத்த படத்தில் நடிகர்களே இருக்க மாட்டார்களாம். “கதையில்லாமல் படமெடுப்பதுதானே தமிழ்
சினிமாக்காரர்கள் பலரது வழக்கம். இதென்ன புதுமையோ புதுமை? புரியலியே!” என்றதும், “படத்தை எடுத்து முடிச்சு போட்டுக்காட்டறோம். அப்ப புரியும்” என்று கூறி, கை குலுக்கினார்!

_புதியதலைமுறை

#adavi #sethulaxmi #velmurugan #tamilcinima

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares