d tags of your site:
Mon. Jul 22- 2019

தமிழக முதல்வர் இன்று சட்டசபயில் 110-விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்

Share This News:

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனடியாக அரவை செய்திட ஏதுவாக, கூடுதலாக நவீன அரிசி ஆலைகளை நிறுவிட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன இயந்திரங்களைக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் நிறுவப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பயன்பாட்டில் உள்ள சொந்தக் கிடங்குகளின் கொள்ளளவினை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் உணவு தானியங்களை இருப்பு வைப்பதற்கான தேவையினை கருத்தில் கொண்டும்,

கூடுதலாக 36,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 கிடங்குகள் பல்வேறு இடங்களில் 59.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கல்நார் மேற்கூரைகளுடன் இயங்கி வரும் 55 கிடங்குகளில், மேற்கூரைகளை அகற்றிவிட்டு, நவீன மேற்கூரை அமைப்பான, வண்ணம் தீட்டப்பட்ட ஸ்திர தன்மை அதிகம் கொண்ட துருப்பிடிக்காத மேற்கூரை அமைக்கும் பணி 21.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கிவரும் கிடங்குகளின் வளாகத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளுக்கு பதிலாக நீண்ட நாள் பயன்படுத்தும் வகையிலும், மழைக் காலங்களில் சேதமடையாத வகையிலும், 54.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் நடப்பு நிதி ஆண்டில் அமைக்கப்படும்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மூலம் காய்கறிகள், புளி, பழங்கள், பருப்பு வகைகள், பூக்கள் மற்றும் இதர விவசாய பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்திட 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய மின் சக்தியுடன் இயங்கக்கூடிய குளிர்சாதனக் கிடங்கு, நடப்பு நிதியாண்டில் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#tnassemblynews #chiefminister #edappadipalanisamy

அதிகம் வாசிக்கப்பட்டவை...  🕑 1-நிமிட வாசிப்பு-NEWS BRIEF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares